தீபாவளி பண்டிகைக்காலங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவை ஹற்றன் பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவைக்கு சென்ற பஸ் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான பெண்கள் மூவர் இருந்ததையடுத்து ஹற்றன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. ஐந்து பெண்களை சந்தேகத்தின் பேரில் ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் ஐவரும் பொது போக்குவரத்து பஸ்கள் மற்றும் சன நடமாட்டம் அதிகமான இடங்களில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களில் ஈடுபடுவதாக சந்தேகிப்பதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தார்.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் நேர்த்தியாக ஆடை அணிந்து, தம்மை எவரேனும் சந்தேகம் கொள்ளாதவாறு நடந்துக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.
பெண்களின் பைகளை சோதனையிட்ட போது அதில் பல ஏ.டி.எம் அட்டைகள், அடையாள அட்டைகள் இருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்களை ஹற்றன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக்காலங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்ட நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு நகைகள் பணப்பைகள் என்பதை தாமே பாதுகாத்துக்கொள்வது அவசியம் எனவும் அட்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக ஹற்றன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சிவில் உடைகளில் பலர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஹற்றன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த பண்டிகைக்காலங்களில் இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 14 பேரை ஹற்றன் பொலிஸார் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










