நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்புலம் தொடர்பிலும், அதனுடன் தொடர்புபட்ட தரப்புகள் சம்பந்தமாகவும் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேற்படி சம்பவத்தை சாதாரணதொரு சம்பவமாக அரசாங்கம் கருதவில்லை எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது பாதாளகுழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலகோணங்களில் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பினர்.
கனேமுல்ல சஞ்ஜீவ ஒரு நீதிமன்ற அறையில் இருந்து மற்றுமொரு அறைக்கு செல்வது தொடர்பில் எவ்வாறு தகவல் தெரிந்துள்ளது, சட்டத்தரணிகள் எவரேனும் இதற்கு உதவியுள்ளனரா, இதனால் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையா? துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பல கொலைகளுடன் தொடர்புபட்டவர் எனில் இதற்கு முன்னர் ஏன் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பட்டன.
இவற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,
“ இது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. விசாரணைகளின் அடிப்படையிலேயே தகவல்கள் வெளிவரும்.
இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாளை (இன்று) நாடாளுமன்றத்தில் தகவல்கள் வெளியிடுவார். அப்போதுகூட முழுமையான தகவல்களை வெளியிடமுடியுமா என தெரியவில்லை. ஏனெனில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமைச்சரவையிலும் இது பற்றி கலந்துரையாடப்பட்டது. உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதி அமைச்சர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.” -என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
