துருக்கியில் தீவிரவாத தாக்குதல்: 5 பேர் பலி!

துருக்கி நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துருக்கி தங்கள் ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனத்தில் தயாரிக்கிறது. இது தலைநகர் அங்காராவில் இருக்கும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நிறைந்த அந்த நிறுவனத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் யெரில்காயா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ஓர் ஆண் மற்றும் பெண் தீவிரவாதி என இருவர் நடத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என துருக்கி துணை அதிபர் செவ்டெட் யில்மா கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் குர்திஷ்தான் வொர்க்கர்ஸ் பார்ட்டியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுவினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். பிகேகே பயங்கரவாத அமைப்பாக துருக்கியால் அறிவிக்கப்பட்ட இயக்கமாகும். ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவும் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவே அடையாளப்படுத்துகிறது.

தாக்குதல் நடந்தபோது துருக்கி அதிபர் எர்டோகான், ரஷ்யாவின் காசன் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா இரங்கல் தெரிவித்துள்ளது.

துருக்கி பதிலடி: இந்தத் தீவிரவாத தாக்குதலை குர்திஷ் இயக்கத்தினரே நடத்திருக்கக் கூடும் என்று கணிப்பதால் துருக்கி ராணுவம் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பதுங்கிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. துருக்கி தாக்குதலில் 30 இலக்குகள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பாவி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles