துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த 12 நாட்கள் கடந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் சுமார் 345,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து தொடர்ந்தும் பலர் காணாமல்போன நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் அதன் பின்னர் பதிவான சக்திவாய்ந்த அதிர்வினால் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளில் பெரும் அழிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகவும் உதவி தேவை உடையவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் பெரும் பகுதியான மீட்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக துருக்கி அனர்த்த மற்றும் அவசர முகாமை அதிகாரசபையின் தலைமை தெரிவித்துள்ளது.
பூகம்பத்தால் துருக்கியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,642 ஆக உயர்ந்திருப்பதோடு அண்டை நாடான சிரியாவில் 5,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் கிரிகிஸ்தான் நாட்டில் இருந்து வந்த மீட்பாளர்கள் தெற்கு துருக்கியின் அன்டக்யாக் நகரில் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை ஒரே குடும்பத்தின் ஐவரை மீட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிருடன் காப்பற்றப்பட்டனர். தாய், தந்தை உயிர் தப்பியபோதும் குழந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பின்னர் உயிரிழந்ததாக மீட்புக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி அந்தக் குடும்பத்தில் மூத்த சகோதரி மற்றும் இரட்டைக் குழுந்தைகள் உயிழந்துள்ளனர்.
எனினும் வெளிநாட்டு மீட்பாளர்கள் தமது பணியை முடித்து வெளியேறும் நிலையில் இடிபாடுகளில் தொடர்ந்தும் உயிருடன் இருப்பார்கள் என்ற சிறிய நம்பிக்கையுடன் உள்ளூர் மீட்பாளர்கள் அங்கு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளது. அதிகாரிகள் உணவு விநியோகப் பாதைகளை மறைக்காமல் இருக்கும்படி உலக உணவுத் திட்டம் வலியுறுத்தி வருகிறது. அங்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.