தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக விகாரை மற்றும் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என சுட்டிக்காட்டி இருந்தோம். அது தற்போது நடந்துகொண்டிருக்கின்றது.
டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே இந்த அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை நாம் நிராகரிக்கின்றோம். ஆனால் தெற்கில் இந்துக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும்.
வடக்கு மக்கள் கொழும்புக்கு சுதந்திரமாக வந்து செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது. தெற்கில் இருந்து வடக்குக்கு செல்லும் பௌத்த மக்களுக்கும் அந்த உரித்து கிடைக்கப்பெறவேண்டும்.” – என்றார்.










