தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திர பிரசாத், “
இந்த விபத்தில் இதுவரை இருபது பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சிறு காயங்களுடன் உள்ள 6 பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
