தேசியப் பட்டியல் விவகாரத்தால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பநிலை உக்கிரமடைந்துள்ளது என தெரியவருகின்றது.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணி மற்றும் டலஸ் அழகப்பெரும தரப்பு என்பன கூட்டணி உறவை முறித்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் ஒன்று கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன ஆகியோருக்கும் தேசியப் பட்டியல் உறுதியாகியுள்ளது.
எஞ்சிய இரண்டு ஆசனங்களை எவருக்கு வழங்குவது என்பதிலேயே தற்போது குழப்பம் நீடிக்கின்றது. சுஜீவ சேனசிங்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நிஷாம் காரியப்பர், ஹிருணிக்கா, டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவருக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.