நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமென்பது தீப்பொறியாகும் . அது நாட்டையும், அரசாங்கத்தையும் அழித்துவிடும். எனவே, தேசிய மக்கள் சக்திக்கு அந்த பலத்தை வழங்கக்கூடாது என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரான முன்னாள் எம்.பி. உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அதில் ஜனாதிபதி தேர்தலில் வென்ற தரப்பே நிச்சயம் வெற்றிபெறும்.அதேபோல ஜனாதிபதி தேர்தலில் வென்ற தரப்புக்கு வாக்கு வங்கியும் அதிகரிக்கும். சிலவேளை குறைந்தால்கூட அது 5 சதவீதமாகவே இருக்கும்.
மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோற்ற பிரதான எதிர்க்கட்சியின் வாக்கு வங்கி சரியும். குறைந்தபட்சம் 25 வீதத்தால் வாக்கு குறையும். அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியால் 113 ஆசனங்களை இலகுவில் பெறமுடியும்.
இவ்வாறு சாதாரண பெரும்பான்மை பலத்தை வழங்கினாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கக்கூடாது.
இவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தால் அரசாங்கமும், நாடும் அழியும் என்பதை அறியாத தரப்பே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோருகின்றன.
1970 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால் அடுத்த தேர்தலில் 8 ஆசனங்கள் என்ற நிலைக்கு சுதந்திரக்கட்சி தள்ளப்பட்டது. அதுமட்டுமல்ல 17 வருடங்கள் ஆட்சியை இழந்துதவிக்க நேரிட்டது.
1977 இல் ஐதேகவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற்றது. அதன்பின்னர் இதுவரை மக்கள் வாக்குகளால் ஐதேகவால் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்ய முடியாமல் உள்ளது.
மஹிந்தவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தது. அவரையும் மக்கள் விரட்டினர். கோட்டாவுக்கும் அந்த பலம் கிடைத்தது. அவரையும் மக்கள் அடித்துவிரட்டினர். எனவே, எந்த தரப்புக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கக்கூடாது.