தேயிலை தொழிற்சாலைகளை நடத்திசெல்ல தேவையான பச்சை கொழுந்து போதுமான அளவில் தொழிற்சாலைகளுக்கு கிடைக்காமையினால் பலாங்கொடை பிரதேசத்தில் தேயிலை தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
தேயிலை உற்பத்திகளுக்கு பயன்படுத்தும் இரசாயன உரம் இரசாயன மருந்துகள், விட்டமின்கள் இன்மை, சீரற்ற காலநிலை,நோய் நிலைமைகள் போன்ற காரணமாக தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தி செய்வதற்கு மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல நாளாந்தம் தேவைப்படும் பச்சை தேயிலை கொழுந்தின் அளவு இத்தினங்களில் நூற்றுக்கு 30% மட்டுமே கிடைப்பதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வலேபொட-, இராசகல-, ஹெரமிடிகல-, சீதகல-, வேவல்வத்த-, சமணலவத்த-, பின்னவல-, எல்லேபொல-,மஸ்ஸன்ன-, ஊவெல்ல-குருபெவில ஆகிய பிரதேசங்களிலிருந்து கிடைக்கும் பச்சை தேயிலை கொழுந்து மூலம் பலாங்கொடை பிரதேசத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது.
இந்த உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையால் தொழிற்சாலைகளை மூடும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். பச்சை தேயிலை கொழுந்து எதிர்வரும் காலங்களில் உரிய முறையில் கிடைக்காதபட்சத்தில் தேயிலை தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
