தேயிலைச் செடியை தொட்டு வணங்கிவிட்டே தொழிலாளர்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர் – தமது சமூக பொறுப்பை நிறுவனங்கள் உணர வேண்டும்!

” பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எனது அமைச்சு ஊடாக வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.
பெருந்தோட்டங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உடன்படிக்கையில் குறைப்பாடுகள் உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் பற்றி மலையக எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் ஒருமித்த குரலில் எடுத்துரைக்க வேண்டும்.”

இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையின் பொருளாதாரத்துக்கு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். அவர்களால்தான் ‘சிலோன் டீ’ நாமம் வாழ்கின்றது.

தேயிலைச்செடியை தொட்டு வணங்கிவிட்டுதான் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் தமது வேலையை ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அர்ப்பணிப்பு மிக்கவர்கள்.

சுதந்திர இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனினும், அவை போதுமானது அல்ல என்பதை ஏற்கவேண்டும். இதற்கு தடையாக உள்ள காரணங்கள் பற்றியும் உங்களுக்கு (மலையக பிரதிநிதிகள்) தெரியும்.

பலவீனமானதொரு குத்தகை ஒப்பந்தம்மூலமே பெருந்தோட்டங்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இது தொடர்பில் மலையக எம்.பிக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்க வேண்டும்.

பெருந்தோட்டங்களை தனியார் நிறுவனங்களிடம் வழங்கும்போது சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான நலன்புரி விடயங்களை வழங்குவதற்கு பின்நிற்கின்றன. அவை தமது சமூக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

7 பேர்ச்சஸ் காணி வீட்டுக்கும், 3 பேர்ச்சஸ் உற்பத்திக்குமென வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles