‘தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க சபையில் மனோ முன்வைத்துள்ள திட்டம்’

பெருந்தோட்டங்களின் நிர்வாகத்தின்கீழுள்ள நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தேயிலை ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

” 75 வீத நிலப்பரப்பு பெருந்தோட்ட கம்பனிகள் வசமே உள்ளன. 25 வீதம்தான் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் இருக்கின்றது. ஆனால் ஏற்றுமதியில் சிறுதோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பு 75 வீதமாகவும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பங்களிப்பு 25 வீதமாகவும் இருக்கின்றது.

எனவே, தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கப்படவேண்டுமானால் பெருந்தோட்டங்களின்கீழ் இருக்கின்ற நிலங்கள், தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்வாங்க வேண்டும். இன்று வெளியார் உற்பத்தி என்ற போர்வையில் சில செயற்பாடுகள் இடம்பெற்றாலும் அவை தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் அடிமை சாசன முறையாகவுமே இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வழங்கிவிட்டு, தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு கொழுந்தை கேட்கின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிடவேண்டும். நிலங்களை பகிர்ந்தளித்து தோட்டத் தொழிலாளர்களை பங்காளிகளாக்கவேண்டும்.  ஏனெனில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் காணி குத்தகைக்குதான் வழங்கப்பட்டுள்ளது. அப்போது தேயிலை பயிர்செய்கை கொடிகட்டி பறக்கும். தொழிலாளர்களும் கிராமவாசிகளாக, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறுவார்கள். இதனை அமைச்சர் செய்வார் என நம்புகின்றோம்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்றார்.

 

 

Related Articles

Latest Articles