தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் போதும். அதனைவிடவும் அதிகரித்தால் அரசியல் தலையீடுகள் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் மூவர் மாத்திரமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். கூட்ட நடப்பெண்ணும் மூன்றாக இருக்கின்றது. இதனால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” மூவர் இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டது. ஐவர் இருந்தால்கூட ஐவரும் இணைந்து முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நால்வர் முடிவெடுக்கும் நிலைமையை அனுமதிக்கமுடியாது.
உலகில் பிரபலமான நாடுகளில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே. அந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசியல் தலையீடுகளும் அதிகரிக்கும். மூவர் இணைந்து எடுக்கும் ஒருமித்த தீர்மானம்தான் முக்கியம். தொழில்நுட்ப வழியாககூட கூட்டங்களை நடத்தலாம்.” – என்றார்.