நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் சிறந்த நிலைக்கு திரும்புகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதி தலைமையிலான அரசும் அதேநிலைப்பாட்டில்தான் உள்ளது. தற்போது தேர்தலுக்கு சாதகமான சூழல் நிலவுகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் எமது வெற்றி உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். நானும் அரசியல் குழுவில் இருக்கின்றேன். மஹிந்த ராஜபக்ச தலைமையில் அந்த குழுகூடியே முடிவெடுக்கும். வெகுவிரைவில் அந்த முடிவு எடுக்கப்படும்.
அதேபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடாது. இணைந்து பயணித்தால் அனைவருக்கும் நல்லது.” – என்றார்.










