மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவருமான அமரர். கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பதுளையில் பல இடங்களில் ஆன்மீக வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நனைவஞ்சலி கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1950 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நுவரெலியா, உடபுஸல்லாவ கார்கிலிஸ் தோட்டத்தில் பிறந்த அமரர் கே. வேலாயுதம், ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையிலும், உயர் கல்வியை பதுளை ஊவா கல்லூரியிலும் பயின்றார். தனது ஆரம்ப கால தொழிலாக ஆங்கில தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த அவர், சிறிதுகாலம் பத்திரிகை நிருபராகவும் செயற்பட்டார்.
1971 காலப்பகுதியில் அரசியலுக்குள் பிரவேசித்த அமரர் கே வேலாயுதம், ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகத்தராக இணைந்து செயற்படத் தொடங்கினார். ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க போன்ற ஐ.தே.கவின் மூத்த தலைவர்களுடன் நேரடி – நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
தொழிற்சங்க மற்றும் அரசியல் பயணத்தின்போது ஆரம்பம் முதலே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த அவர், தொழிலாளர்களுக்காக போராட்டங்களையும் முன்னெடுத்து – தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். இதன்காரணமாகவே மக்கள் மனங்களில் இன்றும் அவர் தொழிற்சங்க தலைவராக வாழ்கின்றார். மலையக அரசியல் தலைவர்களும் இவர்மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதுள்ளவர்களும் வைத்துள்ளனர்.
தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாகவும் அவர்களின் சட்டங்கள் தொடர்பாகவும் ஆழமான அறிவையும் சிந்தனையையும் கொண்ட அமரர் கே. வேலாயுதம், தொழில் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கும் சென்று அது தொடர்பான கலந்துரையாடல்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டவர். கல்வி, அனுபவம், ஆளுமை ஆகியவற்றால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் நெடுநாள் இருந்தனர். தொழிற்சங்க கல்வி என்ற கட்டமைப்பை இவரே ஏற்படுத்தினார். அதன்மூலம் பலருக்கு முன்நோக்கி பயணிக்க களம் அமைத்துக்கொடுத்தார்.
ஊவாவில் மாகாண சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் என அரசியல் கட்டமைப்பிலும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
அதேவேளை, தொழிற்சங்கத்துக்காக மட்டுமல்ல மலையக தமிழர்களின் கலை, கலாசார – பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். குறிப்பாக
ஊவா மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழாக்களையும் கலை, கலாசார விழாக்களையும் முன்னின்று நடத்தியவர். கல்விசார் சமூகத்துடன் நல்ல உறவைப் பேணிவந்ததுடன் அவர்களின் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளித்தவர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு அதற்கான ஒரு உறுதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டும் என்பதில் உறுதியான நின்று – அதற்காக முழுவீச்சுடன் செயற்பட்டனர். பசுமைபூமி திட்டம்மூலம் மலையக மக்களுக்கு காணி உரிமை கிடைக்க பிள்ளையார்சுழிபோட்டவர். தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி தோட்ட கம்பனிகளையும் வழிக்குகொண்டுவந்தனர்.
46 வருடங்களாக ஐ.தே.கவில் பயணித்த அவர், கட்சித் தாவல் என்ற பேச்சிற்கே தனது அரசியலில் இடம் கொடுக்காத ஒருவர். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிய வேளையிலும், இவர்தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக நின்றவர். பட்டம் பதவிகளுக்காக என்றும் ஆசைப்படாத வித்தியாசமான ஒரு தொழிற்சங்க வாதியாகவும் அரசியல் வாதியாகவும் செயற்பட்டவர்.
ஐக்கிய தேசியக் கட்சியையே தனது உயிர் மூச்சாக நினைத்து செயற்பட்டவர். என்றுமே எதிர்க்கட்சியில் அமரத் தயங்காதவர்.
தான் உயிருடன் இருக்கும் வரை கடுகளவும் மக்களுக்கும், கட்சிக்கு துரோகம் இழைக்காத ஒருவர். மக்களுக்காகவே அரசியல் என்பதற்கும் அதேபோல் தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வேலாயுதம் அவர்கள், எம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அவரின் கொள்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றால் வேலாயுதம் எனக்கூறுமளவுக்கு அதன் பரிமாண வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு. பல மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தவர்.