தொழிற்சங்க போராட்டம் வெடிக்கும் – தோட்ட கம்பனிக்கு திகா எச்சரிக்கை

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். நாங்கள் இருக்கின்றோம். தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதியம் உரிய வகையில் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்டது. இதற்கமைய தோட்ட நிர்வாகங்கள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் ஒரு சில தோட்டங்களில் 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக மஸ்கெலியா பிளான்டேசன் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது. தோட்ட கம்பனியின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. கொழுந்து உள்ள காலத்தில் 20 கிலோ எடுக்கலாம். இல்லாத காலத்தில் என்ன செய்வது?
ஆயிரம் ரூபாவை வழங்கமுடியாவிட்டால் தோட்டத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும். நாங்கள் அரசாங்கத்துடன் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கின்றோம்.

இரசாயன உர பயன்பாட்டுக்கு திடீரென விதிக்கப்பட்ட தடையால் பெருந்தோட்டத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் 15 கிலோ பறிக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை. எனவே, உரத்தை இறக்குமதி செய்வதற்காவது அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles