” தோட்டங்களில் இருந்து எமது மக்களை துரத்த இடமளியோம்” – காணி உரிமைக்கான இயக்கம் எச்சரிக்கை

” இருநூறு வருடகாலமாக எமது பாட்டன் பூட்டி வாழ்ந்த காணி, வீடுகளில் இருந்து எம்மை துரத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை.” – என்று மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” நாட்டின் அபிவிருத்திக்காக உழைத்துவரும் மலையக மக்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்த அரசும், பெருந்தோட்ட கம்பனிகளும் தொடர்ச்சியாக மீறி, மறுத்து வருகின்றன.

இருநூறு வருடகாலமாக எமது பாட்டன் பூட்டி வாழ்ந்த காணி, வீடுகளில் இருந்து எம்மை துரத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. குறிப்பாக இந்த நாட்டின் குடிமக்களின் உணவு, உடை, உரையுள் ஆகிய அடிப்படை தேவைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்குரியது.

அவ்வாறான பின்னணியில் கடந்த காலங்களில் மலைய மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்துவித அத்துமீறல்களாலும் பாதிப்புக்கு உள்ளான எமது உறவுகளுக்கு எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளுக்காக குரல் கொடுத்து செயற்படத் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

2023 ஜூலை 6 ஆம் திகதி மாத்தறை உளந்தாவ தோட்ட தொழிலாளரின் வீட்டுத் தோட்டங்களை (வாழை மரங்களை) வெட்டியெரிந்து அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தி காடயர்களின் மிலேச்சத்தனமான அத்துமீறல்களையும் துன்புறுத்தல்களையும்,
2023 ஜூலை 07 ஆம் திகதி இறம்பொட தோட்டத் தொழிலாளர் வேலைக்கு சமூகமளிக்காவிட்டால் லயன் வீடுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும், வேலைக்கு வராததால் ஏற்பட்ட இழப்பை தொழிலாளரிடம் இருந்து அறவிடப்படும் என்ற மறைமுகமான அச்சுறுத்தலை வன்மையாக எதிர்க்கின்றோம்.

மலையக தொழிலாளர்களுக்கு எவ்வித தொழில் பாதுகாப்பும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காது எமது சகோதர சகோதரிகளின் உழைப்பை சூறையாடிய இறம்பொட தோட்ட நிர்வாகம் உட்பட ஏனைய அனைத்து பொந்தோட்ட கம்பனிகளின் அத்துமீறல்களை கண்டிப்பதுடன் மலையக காணி வீட்டு உரிமைகளுக்கான இயக்கம் என்ற வகையில் எமது கண்டனத்தை தெரித்துக்கொள்கின்றோம்.

மேற்படி மலையக மக்கள் மீது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் குறித்து நியாயமான விசாரணைகளையும், இழப்பீட்டையும் வழங்க இந்த அரசு நடவடிக்கைச் செய்ய வேண்டும். குறிப்பாக தொழில் அமைச்சு, பொருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் நேரடியாக தலையீடு செய்து எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். மேற்படி மலையக மக்களின்; காணி, வீட்டு உரிமை மீறலுக்கு எதிராக முன்னெடுக்க அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் எதிராக மக்களுடன் மக்களாக இருந்து மலையக மக்களின் காணி உரிமைகளுக்கான இயக்கம் போராடும். ” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles