“இனவாதத்தை ஒழித்து சமத்துவ ஆட்சியை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளேன். இரத்தினபுரி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் விசேடமாக மலையக மக்களின் துன்பங்கள் துயரங்கள் வலி வேதனைகளை சுமந்து கொண்டு தான் பாராளுமன்றம் செல்கிறேன்.
இனவாதம் இல்லாத இந்த அரசில் இருந்து உரிய பயன்பாடுகள் பெற்றுக் கொள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் கிடைத்த வாய்ப்பினை உறுதியாக பற்றி கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பீ.பிரதீப் தெரிவித்தார்.பொதுத் தேர்தலை முன்னிட்டு காவத்தையில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதுஅவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்த நாட்டுக்கு ஒரு விவசாயின் மகன் ஜனாதிபதியாக வர முடியும் என்றால் ஏன் ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் பாராளு மன்ற உறுப்பினராக வர முடியாது? அடுத்த பாராளுமன்றத்தில் இம்மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் ஆதரவுடன் உறுப்பினராகி சமூகங்களுக்காக என் குரலை ஒலிக்க செய்வேன்.
அடிமைகளாக வந்த நாங்கள் இன்னும் முறையாக ஒரு வேளை உணவைக்கூட உண்ணவில்லை பெரும்பாலான குடும்பங்கள் ஏனைய இரண்டு உணவு வேளைகளை பட்டினியில் தான் கழிக்கிறார்கள் இந்த அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் சிறுபான்மை மக்கள் புரிந்துணர்வுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.