அரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்டங்களை பெருந்தோட்ட கம்பனிகள் நீண்ட கால குத்தகைக்கு பெற்றுள்ளன. இவர்கள் குத்தகை செலுத்துகின்ற மொத்த காணிகளில் தோட்ட குடியிருப்பு பிரதேசமும் அடங்கியுள்ளது.
இதனால் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்ட குடியிருப்பாளர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தோட்ட குடியிருப்பு பிரதேசத்திற்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு செலுத்தும் குத்தகையிலிருந்து அவர்களை விடுவித்து தோட்ட குடியிருப்பவர்களுக்கு அரசாங்கம் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட குடியிருப்பாளர்களை பெருந்தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான பல சட்டங்களை கடந்த கால அரசாங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன.
இச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அதிகாரங்கள் தோட்ட முகாமையாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தோட்ட முகாமையாளரின் தகவலை அடிப்படையாகக் கொண்டு தோட்டங்களில் வசிக்கின்ற எவரை வேண்டுமானாலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும்படி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் உத்தரவிட முடியும். தோட்ட முகாமையாளரின் தகவலின் உண்மைத் தன்மையை அறிவதற்கு எவ்வித விசாரணையும் நடத்தப்படுவதில்லை.
இதனால் கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான தோட்ட குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய எந்த ஒரு வழக்கும் தோட்டக் குடியிருப்பாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
தோட்டக் குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற குடும்பங்களில் சுமார்75% மாணவர்கள் தோட்டங்களில் வேலை செய்யாத வேறு தொழில்துறைகளில் ஈடுபடுபவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்களின் அச்சுறுத்தலை எப்பொழுது வேண்டுமானாலும் எதிர் நோக்கலாம். எனினும் இது சம்பந்தமான தெளிவை இவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
தோட்ட குடியிருப்பு பிரதேசம் என்பது மக்கள் வாழ்கின்ற வாழ்விடங்கள் அவர்களின் காய்கறி பயிரிடப்படும் நிலம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான புற்தரைகள் என்பன உள்ளடங்கப்படுவதோடு, பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்துகின்ற பொது இடங்களான மைதானம், கோவில், மயானம், சிறுவர் பாடசாலை, பாதைகள் போன்றவையும் உள்ளடக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட கம்பனிகள் தான் முகாமை செய்யும் தேயிலை , இறப்பர் காணிகளை பராமரிப்பதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளும் வகையில் அரசாங்கம் சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இது மலையக மக்களை பெருந் தோட்ட கம்பனிகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வழி வகுக்கும். தோட்ட குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் இலங்கைக்கு பிரஜைகளே தவிர பெருந்தோட்ட கம்பனிகளின் பிரஜைகள் அல்ல . இந்த விடயம் சம்பந்தமாக முதலில் தோட்டங்களில் குடியிருக்கும் தோட்ட குடியிருப்பாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான முதற்கட்ட வேலைகளை நாம் உடனடியாக ஆரம்பிக்க உள்ளோம் எனவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.










