” தோட்ட மக்களுக்கு எதையும் செய்யாத எம்.பியைக் கூட ஜனாதிபதி ஐ.நா. அழைத்து சென்றுள்ளார்” – சஜித்

” தோட்ட மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வந்து, தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட ஜனாதிபதி ஐ.நா. கூட்டத்தொடருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

” நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் நாட்டு தலைவர் மாதந்தோறும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றார். அண்மைய காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை, கியூபா, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளுக்கு அவர் இவ்வாறு சென்றார்.

ஜனாதிபதி ஜேர்மனி சென்ற பிறகு ஐ.எம்.எப் இரண்டாவது கட்ட கடன் வசதியை வழங்குவது தள்ளிப்போகும் என்று கூறும்போதும், நிதியமைச்சராக உள்ள ஜனாதிபதி நாட்டில் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களில்,இரசானய உரக் கொள்கையைக் கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தவர்கள்,மொட்டுவின் அமைச்சுப் பதவி இல்லாத எம்.பி.க்கள், தோட்ட மக்களின் வாக்குகளால் வந்து தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத எம்.பி ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டார். இது அரசியல் இலஞ்சம்.

இந்த அனைத்து பயணங்களுக்கான அனைத்து செலவுகளையும் நாட்டின் 220 இலட்சம் மக்களின் பணத்திலிருந்தே செலவளிக்கின்றனர் ,நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஏற்படும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஈடுசெய்யப்படுகின்றன ,இந்த தூதுக்குழு விஜயங்களில்,துறை சார் நிபுணர்களை அழைத்துச் செல்லாது, அமைச்சர்களை அழைத்துச் சென்று அவர்களை சந்தோசப்படுத்துவதையே தற்போதைய ஜனாதிபதி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related Articles

Latest Articles