“போட்டியின் 2ஆவது பாதி எங்களுக்கு சரியாக அமையவில்லை.” என்று இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ண ரி – 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – இலங்கை அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது
இலங்கை அணி உடனான தோல்வியையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை உடனான தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய ரோகித் சர்மா,
” நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடியது எனக்கு மகிழ்ச்சி. துரதிர்ஷ்டவசமாக ஆவேஷ் கான் உடற்தேர்வில் தேர்ச்சியடையவில்லை. பொதுவாக 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு நாங்கள் விளையாடுவோம். ஆனால், உலகக்கோப்பைக்கு முன்பாக 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட வேண்டுமென நாங்கள் எண்ணினோம்.
பந்துவீச்சாளர்களுடன் நாங்கள் எவ்வாறு செயல்படுவோம் என்று அணியாக பதில்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த பந்துவீச்சு கூட்டணியுடன் (3 வேகப்பந்து வீச்சாளர்கள்) நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை இப்போது கண்டறிந்துவிட்டோம்.
கடைசி உலகக்கோப்பை முதல் தற்போதுவரை நாங்கள் நிறைய போட்டிகளில் தோல்வியடையவில்லை. இந்த போட்டிகள் எங்களுக்கு பாடம் கற்பிக்கும். ஆசிய கோப்பையின் போது எங்களை அழுத்தத்திற்குள் உள்ளாக நாங்கள் விரும்பினோம். அதற்கான பதில்களை தேடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்டத்தின் முதல் பாதியை நாங்கள் சரிவர பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், 2-வது பாதி சரியாக செல்லவில்லை. நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். இதுபோன்ற தோல்விகள் அணியாக செயல்படுவது எப்படி என்பதை புரிந்துகொள்ள எங்களுக்கு உணர்த்தும்.” – என்றார்.










