நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ள சுகாதார அமைச்சு

வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு நன்கொடையாளர்களின் உதவியினை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு போதுமான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எந்தவொரு சிகிச்சை நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படவில்லை எனவும்  விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் களஞ்சியசாலைகளில் ஒன்றரை மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக நோயாளர்களை பராமரிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிளினிக் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் ஒரு மாதத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles