நிதி அமைச்சர் அல்லது ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக அல்லாமல் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மட்டும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்தமை தவறான செயற்பாடாகும். இதனால்தான் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் சிரேஷ்ட அரசியல்வாதி. 24 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டுவருகின்றேன். சந்திரிக்கா அம்மையாரின் காலப்பகுதியில் பெற்றோலியவளத்துறை பிரதி அமைச்சராக செயற்பட்டுள்ளேன். எனவே, துறைசார் அமைச்சரால் விலை அதிகரிப்பை மேற்கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். நிதி அமைச்சரே அது தொடர்பில் முடிவெடுப்பார்.அறிவிப்பை மட்டுமே துறைசார் அமைச்சர் விடுப்பார்.
எனவே, நிதி அமைச்சருக்கு எதிராகவே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்
நான் எந்த பக்கத்தில் இருந்தாலும் பிழைய நேரில் சுட்டிக்காட்டுபவன். இப்பிரேரணையால் பிளவுபட்டிருந்த அரச கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. ” -என்றார்.