நாடாளுமன்றத்தை கள்வர்களின் குகையென விமர்சிப்பதற்குரிய உரிமை பெரும்பான்மையை பெறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ ஆசியாவிலேயே இலங்கையில்தான் பழமையான நாடாளுமன்றம் உள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தாது தொடர்ச்சியாக செயற்பட்டுள்ள நாடாளுமன்றம் என்ற பெருமையும் எமது நாட்டுக்கு உள்ளது. எதிர்க்கட்சிகளை தடைவிதித்துவிட்டு செயற்படவும் இல்லை.
நாடாளுமன்றத்தில் முழு அதிகாரத்தையும் தமது கட்சிக்கு வழங்குமாறு அநுரகுமார திஸாநாயக்க சொல்கின்றார். அவருக்கு 42 சதவீத வாக்குகள்தான் கிடைக்கப்பெற்றன. அவர் எப்படி முழு அதிகாரத்தையும் கோர முடியும்? அவருக்கு கணிதம் தெரியவில்லையா?
பொதுத்தேர்தலிலும் 42 சதவீதம்தான் வாக்கு கிடைக்கக்கூடும். அதைவிட அதிகரிக்க வாய்ப்பில்லை. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் யாரென்றுகூட புரியவில்லை. கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர், வேட்பாளர்களை பற்றி கதைப்பதில்லை.
கட்சியை தெரிவு செய்யும் மட்டும் மக்களுக்கு, வேட்பாளர்களை கட்சியே தீர்மானிக்கும் என்றுதான் கூறவருகின்றனர். இதுதான் ஜனநாயகமா? தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.
நாடாளுமன்றம் கள்வர்களின் குகை என்கின்றார்? அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு உள்ள உரிமை என்ன? 42 சதவீதமானோர்தான் அவருக்கு வாக்களித்துள்ளனர். நாடாளுமன்றம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என 58 வீதமானோர் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கை அடிக்கும் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது. ” – என்றார்.










