நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கு புதிய திட்டம்

நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் சிறப்புத் திட்டமொன்று ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சுத் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம்  பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல ஆறுகள் வேகமாக மாசுபடுவதாகவும், இதன் விளைவாக ஏராளமான கழிவுகள் கடலிலும் அதைச் சுற்றியுள்ள சூழலிலும் ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, குறித்த திட்டம் மக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படும். ஆறுகள் உருவாகும் பகுதிகளின் தூய்மைப்படுத்துவதற்கான பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது எதிர்காலத்தில் ‘ஆறுகளைப் பாதுகாப்போம்’ என்ற முதன்மைத்திட்டமாக இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

வடமேற்கு மாகாணத்தில் ஒரு பெரிய அளவிலான மணல் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக மதிப்புமிக்க தெங்கு நிலங்கள் விரைவாக இழக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறித்த செயற்பாட்டுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது உத்தரவிட்டார்.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, இலங்கையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மணல், கல் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கான செயல்முறை மிகவும் முறைசாரா செயல்முறையாக மாறியுள்ளது என்றார்.

இதனால் கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களையும், களிமண் போன்ற தொழில்துறை மூலப்பொருட்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் வழங்குவதற்கான ஒரு வழிமுறையை வகுக்க ‘ஜனாதிபதி செயலணி’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த செயலணியில் உறுப்பினராக உள்ளவர் என்ற வகையில் செயலணியின் அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் குறித்த விடயங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர், கட்டுமான மூலப்பொருட்கள் துறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும் என்றும், கடத்தல் காரர்களுக்கு பதிலாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை பெற்றுத்தர முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

Paid Ad