கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியிலான தீர்மானத்தை அரசு இன்னும் எடுக்கவில்லை. இது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞானப்பூர்வமான பொது முடக்கமே அவசியம் – என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஜயரத்ன பண்டார கூறியவை வறுமாறு,
“ கொரோனா வைரஸ் என்பது உலகலாளிய தொற்று, இலங்கையில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் இந்நிலைதான் என்ற கருத்து ஆரம்பம் முதல் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இது தவறானதொரு கருத்தாகும். கொரோனா தொற்ற ஆரம்பித்த காலம் முதல் ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறான உபா வழிமுறைகளைக் கையாண்டன.
கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சில நாடுகளும், கொரோனாவுடன் வாழுதல் என்ற நிலைப்பாட்டை மேலும் சில நாடுகள் எடுத்தன. அந்தவகையில் கொரோனாவுடன் வாழுதல் என்ற நிலையிலேயே இலங்கை இன்னமும் உள்ளது. கொரோனா வைரஸ் ஒழிக்கப்படும் என்ற கொள்கை ரீதியிலான தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்த தீர்மானம் உடன் எடுக்கப்பட்டு, அதனை நோக்கி பயணிப்பதற்கான தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும். இது அரச தலைமைக்கான பொறுப்பாகும்.
கொரோனா அலைகளை கட்டுப்படுத்தாமல் 3ஆம் அலை மற்றும் 4 ஆம் அலை தொடர்பில் கதைக்கின்றோம். இலங்கையில் இன்னும் 2ஆவது அலையே வீசுகின்றது. பிரிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவில்லை. தொற்றாளர்களை தேடிச்சென்று அடையாளம் காணமுடியாத நிலை சுகாதார அதிகாரிகளுக்கே ஏற்பட்டவேளையிலேயே நெருக்கடி நிலையை உணர்ந்திருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞானப்பூர்வமான பொது முடக்கவே அவசியம்.இல்லையேல் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.” – என்றார்.










