” நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்லன்” – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

” நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனாலும் மாகாணசபை முறைமையை எதிர்க்கின்றேன்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் . அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன். அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும். மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும். ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை. இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது. தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.

கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள். அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் .ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன்.” – என்றார்.

Related Articles

Latest Articles