” நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மொட்டு கட்சியின் கூட்டமொன்று கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்றது, இதில் உரையாற்றிய மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர், நாமல் ராஜபக்ச ஒரு இளம் சிங்கம் எனவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியானவர் எனவும் கருத்து வெளியிட்டனர்.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இளம் சிங்கத்தை களமிறக்குவதற்கு தீர்மானித்துவிட்டீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாகர காரியவசம்,
” அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துக்கு பிறகே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். குறித்த தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே எமது கட்சி பதற்றம் அடையாது. நாட்டின் அப்போதைய நிலைமை, மக்களின் நிலைப்பாடு, அரசியல் நிலைவரம் ஆகியவற்றைக்கருத்திற்கொண்டு வெற்றி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம். இதை மட்டுமே தற்போது அறிவிக்க முடியும்.
இந்நாட்டில் உள்ள திறமையான இளம் தலைவர்தான் நாமல். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் பற்றி கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.” – என்றார்.
