பலமான அணியாகக் கருதப்படும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹமதுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் ஜத்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார்.
அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 103 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது.
அதன்பின் வந்த ஓமர்ஜாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. பின் ஆலன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது.கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரனனிலும் ஆட்டமிழந்தனர்.பரூக்கி, ரஷித் கான் தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்க்க 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து.
இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.