“நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம்”

தேசிய காணி தினத்தை முன்னிட்டு மலையக மக்களின் நில உரிமைக்கான இயக்கம் ஏற்பாடு செய்துள்ள விழிப்புணர்வு பேரணியும், கருத்தரங்கும்
” நில உரிமை மற்றும் நீதிக்காக ஒன்றிணைவோம், எந்தவொரு குடும்பமும் புறக்கணிக்கப்பட கூடாது” என்ற தொனிப்பொருளில் நாளை 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பசறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த இயக்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுரேஷ் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;

203 ஆண்டுகளுக்கும் மேலாக, மலையக மக்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்துள்ளனர். இருப்பினும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று வரை தாங்கள் வாழும் நிலத்திற்கு உரிமையைப் பெற்றிருக்கவில்லை.

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு இந்த நீண்டகால அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுள்ளது. சட்டபூர்வமான நில உரிமை இல்லாததால், பல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரணம், வீட்டு வசதி உதவி மற்றும் மீள்குடியேற்ற ஆதரவுகள் மறுக்கப்பட்டுள்ளன.

இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
தேசிய காணி தினம் 2026 அன்று, சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவில் ஒவ்வொரு மலையகக் குடும்பத்திற்கும்:

20 பேர்ச் நில உரிமை,

பாதுகாப்பான வீடு,

கண்ணியமான வாழ்க்கை மற்றும்
நீதி

என்பவற்றை வலியுறுத்துவதற்காக நாம் நாளை ஒன்றிணைகிறோம்.

மலையகத்தின் பல்வேறு சமுகநல அமைப்புகள் இணைந்து மலையக நிலப் பிரகடனத்தை முன்வைத்து, நில உரிமையை அடிப்படை மனித உரிமையாக அரசாங்கம் அங்கீகரிக்கவும், பேரிடர் மீட்பில் எந்தக் குடும்பமும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்துவதற்கான மகஜரை நாட்டின் ஜனாதிபதிக்கு கையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles