நுகேகொடை பேரணியில் பங்கேற்க மறுக்கும் தரப்பினருக்கு ஆளுங்கட்சியுடன் “டீல்” இருக்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன அதிகாரம் என்பன விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே மேற்படி குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ நுகேகொடை கூட்டமென்பது கட்சிகளின் கொள்கையுடன் தொடர்புபட்டது அல்ல. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எமது கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும், இது பொது வேலைத்திட்டமென்பதால் அக்கட்சி பங்கேற்கின்றது.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்துக்காகவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுமே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சிகளால் பங்கேற்காமல் இருக்க முடியாது. குறைந்தபட்சம் பேரணியை ஆதரித்தாவது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அவ்வாறு செய்ய மறுக்கும் எதிரணி தரப்புக்கு அரசாங்கத்துடன் “ டீல்”இருக்கக்கூடும் அல்லது வர்த்தக கொடுக்கல் – வாங்கல் இருக்கக்கூடும்.” – என்றார் சாகர காரியவசம்.










