நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றையும் புடவை கடை ஒன்றையுமே சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த இரண்டு வியாபார நிலையங்களுக்கும் வைத்தியர் ஒருவர் வந்து சென்ற நிலையிலேயே அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்த இரண்டு வியாபார நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வைத்தியர் கம்பளையில் இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதே வேளை நுவரெலியா லவர்ஸ்லிப் தோட்டத்தில் விநாயகர் புரத்தை சேர்ந்த 22 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் வசித்த நபர் ஒருவர் தனக்கு காய்ச்சல் காரணமாக நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.இதன்போது இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பொழுது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்பு இவரை கண்டியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மத்திய நிலையம் ஒன்றுக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பொழுது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவரை இவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இருந்தாலும் பாதுகாப்பு கருதி இவரையும் இவர் வசிக்கின்ற பகுதியில் அமைந்துள்ள 22குடும்பங்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.16 ஆம் திகதிக்கு பின்பு இவர்களை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளை அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற எந்தவிதமான உதவிகளும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் இங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
அத்துடன் நுவரெலியா வஜிரபுர கொளனியை சேர்ந்த 50 குடும்பங்களை சுகாதார பிரிவினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.அண்மையில் இந்த பகுதியில் இறந்தவருக்கு தானம் வழங்கும் நிகழ்விற்கு மாத்தரை பகுதியில் இருந்து பெண் ஒருவர் வருகை தந்துள்ளார்.
இந்த பெண்ணிற்கு ஹட்டன் கலுகல்லை பகுதியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் இவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பி.சி.ஆர் முடிவு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக இந்த தான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து குடும்பங்களையும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினரால் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் கடந்த ஒரு சில நாட்களில் மூன்று வியாபார நிலையங்களும் 72 குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










