நுவரெலியா நகரிற்கு உட்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் நடைபாதை வியாபாரத்திற்கு சந்தரப்பம் வழங்க முடியாது. இது அரசாங்கத்தின் தேசிய கொள்கையை அமுல் படுத்துகின்ற செயல் திட்டம் என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வரும் சட்டத்தரணியுமான சிவன் ஜோதி யோகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் ஒரு சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணம் நடைபாதை வியாபாரிகளுக்கு நடைபாதையை பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
” இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நுவரெலியா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்தனர். பாடசாலை மாணவிகள் நடைபாதையில் பயணிக்கின்ற பொழுது தமக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
பெற்றோர், பொது மக்களும் என்னுடைய காரியாலயத்திற்கு வருகை தந்து இது தொடர்பாக பல முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளார்கள். எனவே நடைபாதை என்பது வியாபாரம் செய்வதற்கான ஒரு இடமல்ல. அது பொது மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு இடமாகும்.
மேலும் நுவரெலியா நகரம் என்பது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்ற ஒரு இடமாகும். எனவே இங்குள்ள நடைபாதைகள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.
எனவே இந்த விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் நுவரெலியா மாநகர சபை ஊடாக பல நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நிலையங்களை பெற்றுக் கொடுத்தாலும் இன்னும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
நாளுக்கு நாள் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்தை நிறைவு செய்துவிட்டு போகின்ற நேரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகளையும் பொறுப்பற்ற விதத்தில் அகற்றிவிடுகின்றார்கள். எனவே இது நகரத்தை சுத்தமாக பேனுவதற்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றது. எனவும் பிரதி முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.