நுவரெலியா நகரில், நுவரெலியா மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டுவரும் பஸ் தரிப்பிடமே இது.
குறித்த பஸ் தரிப்பிடத்தில் உள்ள சுவர்களில் – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின், நாட்டை சுத்தமாக வைத்திருப்போம் என்ற செயற்திட்டத்திற்கு அமைவாக, அண்மையில் இளைஞர் யுவதிகளினால் சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும், அறிவுரைகளையும் எடுத்துரைக்கும் விதத்திலான சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.இதனையடுத்து பஸ் தரிப்பிடமும் வண்ணமயமானது. அழகாக காட்சியளித்தது.
எனினும், பஸ் தரிப்பிடத்தை மாநகரசபை முறையாக பராமரிக்காததால் சுற்றுசுழல் அசுத்தமாக காணப்படுவதுடன், பயணிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன், பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் அனைத்து இருக்கைகளும் சேதமடைந்துள்ளன. இதனால் பஸ்களுக்காக நெடுநேரம் காத்திருப்பவர்களுக்கு அமர்வதற்குகூட உரிய வசதிகள் இல்லை.
நுவரெலியா என்றதும் பசுமையும் அதன் அழகுமே அனைவரினது மனத்திரைகளுக்குள்ளும் வந்துசெல்லும். இவ்வாறான அழகிய நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தை இவ்வாறு வைத்திருக்கலாமா? சுத்தமாக, பாவனைக்கு ஏற்ற வகையில் வைத்திருக்கவேண்டியது மாநகரசபையின் கடமை அல்லவா?
கொழும்பு, கண்டி, குருணாகலை, யாழ்ப்பாணம், வெலிமடை , பண்டாரவளை, பதுளை, கதிர்காமம், காலி, ஹட்டன், புஸல்லாவை, பூண்டுலோயா, ராகலை, உடபுஸ்ஸல்லாவை, மீபிலிமான, கந்தபளை, வலப்பனை போன்ற இடங்களுக்கும், நுவரெலியாவை சூழவுள்ள தோட்ட மற்றும் கிராமங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச பஸ்கள் குறித்த பஸ் தரிப்பிடத்திலேயே நிறுத்தப்படும்.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்