நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரே ஒரு பி.சி.ஆர் இயந்திரமே இருக்கின்றது.இன்றைய சூழ்நிலையில் இன்னும் ஒரு பி.சி.ஆர் இயந்திரம் அவசரமாக தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னிணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
இன்றயை சூழ்நிலையில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது.குறிப்பாக நுவரெலியாவில் 104 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு கடந்த 28 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படியே இந்த எண்ணிக்கை இனம் காணப்பட்டுள்ளது.
அதற்கு காரணம் ஒரே ஒரு பி.ச.pஆர் இயந்திரமே செயற்படுகின்றது.சரியான முறையில் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படுமாக இருந்தால் இன்னும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்படுவார்கள்.பி.சி.ஆர் சோதனை முடிவுகள் மிகவும் மந்த கதியிலேயே வெளிவருகின்றது.
தொற்றாளர்கள் திறந்த வெளியிலும் பொது இடங்களில் சுயாதீனமாக செயற்படுகின்றார்கள்.அவர்களை இனம் கண்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.முடிவுகள் மிக விரைவாக வெளிவர வேண்டும்.
இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொற்று பரவுவதை எந்த காரணம் கொண்டும் கட்டுப்படுத்த முடியாது.எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரையில் முறையான பி.சி.ஆர் சோதனையோ அல்லது தடுப்பூசியோ இன்னும் வழங்கப்படவில்லை.இன்றைய சூழ்நிலையில் அநேகமானவர்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்கின்ற இந்த நிலையில் எங்களுடைய தாய்மாரும் சகோதரர்களும் களத்தில் இருந்து தொழில் செய்கின்றார்கள்.
அவர்கள் தொழில் செய்வதன் காரணமாகவே எங்குளுடைய நாட்டின் பொருளாதாரம் ஒரளவேனும் நிலையாக இருக்கின்றது.அவர்கள் தங்களுடைய வேலை செய்வதை நிறுத்தினால் நிலைமை என்ன?
அரசாங்கம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று அரசாங்கம் பாதுகாப்பு பிரிவினர் சுகாதார துறையினர் ஏனையவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
அவர்களும் இந்த நாட்டின் முதுகெலும்பாக செயற்படுகின்றவர்கள்.எனவே ஏனைய சமூகத்தையும் ஏனைய தொழில் துறையில் உள்ளவர்கள் தொடர்பாக காட்டப்படுகின்ற முக்கியத்துவம் எங்களுடைய தொழிலாளர்கள் மீதும் செலுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
