“நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது. இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகைள் உருவாக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
எம். உதயகுமார் எம்.பியின் பாராளுமன்ற உரைவருமாறு,
” ஒரு நாட்டின் வளர்ச்சியில்,முன்னேற்றத்தில் அச்சாணியாகத் திகழ்வது கல்வியாகும். அதனால்தான் கல்வியின் சிறப்பு பற்றி கூறும் போது பார்வையை வழங்கக்கூடிய கண்களுக்கு ஒப்பிட்டு ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பர்.
மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்கள் நிரந்தர நியமனம் இன்றி சிரமத்தை எதிர்நோக்கிய போது பலரும் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த உயரிய பாராளுமன்றில் எதிர்கட்சி ஊடாக பிரேரணை முன்வைத்து உங்களது கவனத்திற்கு இந்த விடயத்தை நாம் கொண்டு வந்தோம்.
நீங்களும் உடனடியாக செயற்பட்டு மத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் கிடைக்க உறுதுணையாக இருந்தீர்கள். அதற்காக உங்களுக்கு எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நுவரெலியா மாவட்டத்தின் இன்றைய கல்வி தேவைகள் குறித்து இந்த சபையில் உரையாற்றினால் அதற்கு ஒரு நாள் போதாது. அந்த அளவு பிரச்சினைகள் மற்றும் குறைகள் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும் அதில் உள்ள முக்கிய சில விடயங்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என விரும்புகிறேன்.
நுவரெலியா மாவட்ட கல்வித் துறையில் குறிப்பாக தமிழ் கல்விப் பிரிவில் தேசிய பாடசாலை என்ற விடயம் இன்னும் எட்டக்கணியாகவே இருந்து வருகிறது. கடந்த அரசாங்கத்தில்தேசிய பாடசாலைகள் உருவாக்க முயற்சி எடுத்த போதும் அரசியல் ரீதியான காரணங்களாள் அதனை செய்ல் படுத்த முடியவில்லை.
அனைத்து பாடசாலைகளையும் மாகாண கல்வி அமைச்சின் கீழ் வைத்துக் கொண்டு தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் சிலர் செயற்படுவதை காண முடிகிறது.
நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது.
இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகைள் உருவாக்கப்பட வேண்டும். திறமையான அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ள பாடசாலைகள் தேசிய அளவிற்கு செல்ல முடியாமல் மாகாணத்திற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 8 தேசிய பாடசாலைகள் உள்ளன. அதில் ஒன்றுகூட தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், நுவரெலியா வலயத்தில் 123 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் ஹட்டன் வலயத்தில் 112 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் கொத்மலை வலயத்தில் 36 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் வலப்பனை வலயத்தில் 24 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் ஹங்குராங்கெத்தை வலயத்தில் 12 தமிழ் மொழி மூல பாடசாலகைளுமாக மொத்தம் 443 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்றன.
இவற்றில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதார மற்றும் உயர் தர பரீட்சைகளில் சாதனை பெறுபேறுகளை வௌியிடும் பாடசாலைகள் உள்ள போதும் ஒன்றுகூட தமிழ் மொழி மூல தேசிய பாடசாலை கிடையாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே உங்களின் காலத்திலாவது நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகள் எந்த அரசியல் தலையீடும் இன்றி உருவாக்கப்பட வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் இன்னும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர் ஆலோசகர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது.
ஆசிரியர் ஆலோசகர்களாக நியமனம் பெற தகுதி உடையவர்கள் பலர் உள்ள போதும் ஏதோ காரணத்தால் அவர்களுக்கு நியமனம் கிடைக்கவில்லை. இந்த ஆசிரியர் ஆலோசகர் நியமன விடயத்தில் அமைச்சர் அவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் ஊடாக அநேகமான பாடசாலைகளுக்கு குடிநீர், மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கட்டிடங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் சில பாடசாலைகளுக்கு கட்டிடம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் தூர பிரதேச பாடசாலைகள் குறிப்பாக தோட்டப் பாடசாலைகள் இன்னும் முறையான கட்டிட வசதி இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. சில பாடசாலைகள் கொழுந்து நிறுக்கப்படும் மடுவத்தில் இயங்குகிறது. சில இடங்களில் வகுப்புகள் ஆதி காலத்தைப் போன்று மரத்திற்கு அடியில் நடத்தப்படுகிறது.
எனவே இவ்விடயத்தை கருத்திற் கொண்டு தோட்டப் புற பாடசாலைகளில் காணப்படும் கட்டிட குறைப்பாட்டை நிவர்த்த செய்ய கெளரவ கல்வி அமைச்சர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நுவரெலியா மாவட்டத்தில் கல்வித்துறையில் தற்போது பிள்ளைகள் முன்னேற்றத்தை கண்டுள்ள போதும் பாடசாலை இடைவிலகள் நிலைமையை கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
இலவசக் கல்வி உள்ள நாட்டில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் என்பது கவலையளிக்கும் நிலையாகும். இதனை கட்டுப்படுத்த கொள்கை ரீதியான திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். கட்டாயக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான சட்டங்கள் அல்லது சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அந்த திட்டத்தை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சுகின்றனர். இதனால் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்துள்ளது. இவ்விடயத்தை கருத்திற் கொண்டு முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பூர்த்தி செய்து பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ” – என்றார்.










