நுவரெலியா மாவட்டத்திலிருந்துவரும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஆறு உறுப்பினர்களாக குறைப்பதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
நுவரெலியா கூட்டுறவு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,இது நுவரெலியா மாவட்டத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதுடன் திட்டமிட்ட சதியாகும்.
ஆகவே நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை குறைப்பதற்கு இடமளிக்க கூடாது என்றார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்திற்கு எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்பின்னர் கடந்த வருடம் ஓர் உறுப்பினர் நுவரெலியா மாவட்டத்தில் குறைக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டது.
தற்போது இன்னுமோர் உறுப்பினரை நுவரெலியா மாவட்டத்திலிருந்து குறைத்து, காலி மாவட்டத்தில் அதிகரிக்கப் போவதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் இருந்த நுவரெலியா லவர்சிலிப் தோட்டத்தில் ஒரு பகுதியை, நுவரெலியா பிரதேசத்திற்குள் பிரித்து விட்டனர்.
இதனால் நுவரெலியா மாநகர சபைக்கு தமிழ் உறுப்பினர் ஒருவர் தெரிவாகும் நிலை இல்லாமல் போனது. இதுபோன்று,
நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டால் எமது தமிழ் பிரதிநிதித்துவம் நுவரெலியா மாவட்டத்தில் குறைவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆகையால், தொழில் நிமித்தம் வெளி மாவட்டங்களிலும் வெளிநாடுகளில் தொழில் செய்பவர்களும் தங்களது வாக்கு பதிவுகளை நுவரெலியா மாவட்டத்தில் பதிவு செய்து
கொள்ளவேண்டும் ” – என்றார்