பங்களாதேசின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) இன்று அதிகாலை காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த நவம்பர் 23-ம் திகதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை.
கடந்த டிசம்பர் 11-ம் திகதி முதல் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியான கலீதா ஜியா, 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார்.
1984-ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர், 1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார்.
17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் பங்களாதேஸ் திரும்பியிருந்தார்.
பங்களாதேஸ் அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலீதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










