கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பாதாள குழு மோதல் தொடர்புபட்டுள்ளது என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆட்டோவில் இருந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
‘படா ரஞ்சி’ என அழைக்கப்படும் செல்வம் ஆறுமுகன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. தைப்பொங்கலை கொண்டாட வந்திருந்த நிலையிலேயே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் தந்தை சில வருடங்களுக்கு முன்னர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையில் கஞ்சிபானி இம்ரானின் சகாக்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்தாலும், பின்னர் பிணையில் விடுதலையனதும், நாட்டைவிட்டு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
