“பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம்.”
– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
“கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன்.
நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகின்றேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?” – என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
மேலும், “எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வித் துறையில் பழிவாங்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆளுநர், “இங்கே பழிவாங்குவதற்குத் தரும் முக்கியத்துவத்தை, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள். பிள்ளைகள் கல்வியில் மேம்படுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதனாலும் வராது. அதற்குரிய திட்டங்களைத் தயாரியுங்கள். ஒவ்வொன்றையும் களத்துக்குச் சென்று ஆராயுங்கள்.” – என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
