பதவி துறக்கமாட்டேன் – ரொஷான் ரணசிங்க அதிரடி

பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, பதவி துறக்கும் எண்ணம் இல்லை – என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அமைச்சு பதவியை துறந்து, எதிரணியில் அமர்வீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 69 லட்சம் பேர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர். அதில் எனக்கும் பங்கு உள்ளது. ஊழல், மோசடி அற்ற ஆட்சி மற்றும் தேசிய பாதுகாப்புக்காகவே மக்கள் ஆதரவை வழங்கினர். இதன்படி தேசிய இளைஞர் சேவை மன்றம், விளையாட்டு மற்றும் விளையாட்டு சங்கங்களின் மோசடி இருப்பதாகவும், அவற்றை சீர்செய்யுமாறும்கூறியே அமைச்சு பதவியை கோட்டாபய ராஜபக்ச எனக்கு வழங்கினார். அவர் பதவி விலகிய பின்பும் விடயதானங்களை ரணில் விக்கிரமசிங்க அப்படியே எனக்கு வழங்கினார்.

நான் பதவி விலகினால் பிரச்சினை தீருமா? இல்லை. பிரச்சினையை சரிசெய்யவே வந்துள்ளேன். அதனை செய்வதற்கு முற்படுவேன். சரியான விடயத்தை செய்யும் நபரை ஆளுங்கட்சியினர் எதிர்க்கமாட்டார்கள் என நம்புகின்றேன். ” – என்றார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் கோரிக்கையின் பிரகாரமே சர்வதேச கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் தடை விதித்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles