‘பதுளையில் அதிபர்கள், ஆசிரியர்களை இலக்கு வைக்கும் அரசியல்வாதிகள்’

பதுளை மாவட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றன. இதன் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருவர் இருந்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பதுளை மற்றும் லுணுகலை பகுதிகளைச் சேர்ந்த அதிபர்கள் அண்மையில் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் இருவரும், அவர்களின் ஆதரவாளர்களுமே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மேலும் சில சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மக்களின் அமோக ஆணையைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமை தாங்கும் அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது உடன் நிறுத்தப்படவேண்டும்.

ஆசிரியர்களை மண்டியிடவைத்த அரசியல் வாதிகளுக்கு கட்சியில் பிரதான விடயங்களை மேற்கொள்வதற்கான பதவிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தன. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாமல் இவ்வாறு பதவிகள் வழங்கப்படுவதாலேயே அராஜக சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எனவே, கல்விசமூகத்தை சீண்டும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

பதுளை மத்திய மகா வித்தியாலய அதிபர் புபுது ஜயசிங்க நேற்று முன்தினம்(11 ஆம் திகதி) தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நபர் அரசியல் வாதிகளுடன் நெருங்கிய உறவினைக் கொண்டவர் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles