பதுளை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட காரியாலய பிரிவு, மாணிக்கவல்லி, மத்தியப்பிரிவு வேவெஸ்ஸ கம, கல்குடா வத்தை மற்றும் நிக்கவத்தை போன்ற கிராம பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வாழும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மாலை 6மணிக்கு பின்னர் கூட்டங் கூட்டமாக வரும் காட்டெருமைகள் காலை 6மணிக்கு பிறகும் மக்கள் நடமாடும் கிராம, தோட்ட வீதிகளில் நிற்பதால் காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர் மற்றும் வேவெஸ்ஸ தோட்டத்தில் இறப்பர் பால் சேகரிக்க வரும் பெண்கள் என அனைவரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் இப்பகுதியில் உலாவி வந்த காட்டெருமைகளை காடுகளுக்கு விரட்டும் செயற்பாட்டை பதுளை பிரதேச சபை முன்னெடுத்து வந்தது. எனினும் அச்செயற்பாடு இடைநடுவே கைவிடப்பட்டதால் மீண்டும் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே காட்டெருமைகளின் நடமாட்டத்தை குறைக்க மக்கள் பிரதிநிதிகளும், பதுளை பிரதேச சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
பசறை நிருபர்










