பதுளையில் வைத்தியரை இரும்புக் கம்பியால் தாக்கிய ஊழியருக்கு மறியல்!

பதுளை வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணரொருவரை, இரும்புக் கம்பியினால் தாக்கிய வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 28ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதுளை வைத்தியசாலை வளவில் இடம்பெற்ற, மேற்படித் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பதுளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில், இன்று (24-08-2020) ஆஜர் செய்யப்பட்டார்.

ஆஜர் செய்யப்பட்ட அவ் ஊழியரை எதிர்வரும் 28ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட விசேட வைத்திய நிபுணர் தமது வாகனத்தில் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவ் வாகனத்தின் பின்னால் மருத்துவமனை ஊழியர் தமது ஆட்டோவை செலுத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இவ் ஆட்டோவை வைத்திய நிபுணரின் வாகனத்திற்கு முன்னால் செலுத்த முயற்சித்த போதிலும், அதற்கு வைத்திய நிபுணரின் வாகனம் இடம் கொடுக்கவில்லை.

இதனால், ஆத்திரம் கொண்ட ஆட்டோ சாரதி, தமது ஆட்டோவை, வைத்திய நிபுணரின் வாகனத்துடன் மோதச் செய்தார். இதையடுத்து, மருத்துவமனை வளவில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு,  வாய்த்தர்க்கம் முற்றவே, ஆட்டோவை செலுத்தி வந்த மருத்துவமனை ஊழியர் தமது ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பியொன்றினால், வைத்திய நிபுணரை தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலினால், வைத்திய நிபுணர் கடுங்காயங்களுக்குள்ளாகி, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விருவருக்குமே வைத்திய நிபுணர், மருத்துவமனை ஊழியர் என்று இனங் கண்டு கொள்ளவில்லையென்பதும், ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுளைப் பொலிசார் இச் சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles