பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு தெரிவித்தார்.
” கொழும்பில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் பெண்ணொருவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் எத்தகைய பாரபட்சமும் இன்றி அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
சட்டத்திற்கு வெளியே எதுவும் இடம்பெறாது. அதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். அதுதொடர்பில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
இத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் எனக்கு எழுத்து மூலம் வழங்குமாறு மனோகணேசனை கேட்டுக்கொள்கிறேன். அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுகிறேன். நீதிமன்ற நடவடிக்கையுடன் தொடர்புபட்ட விடயம் சம்பந்தமாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்போம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகவே நான் தொலைபேசி மூலம் அது தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
