பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு

பசறை நிருபர்

பதுளை மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து பலத்த அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் லுனுகலை, ஹல்துமுல்ல, எல்ல, ஹாலிஎல, ரிதிமாலியத்த, பசறை, பதுளை, வெளிமடை, மீகாகிவுல, ஊவாபரணகம, மகியங்கன, பண்டாரவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் பண்டாரவளை பிந்துனுவெவ பகுதியில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த 61 வயது நிரம்பிய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

அனர்த்தங்களில் சிக்கி காயமடைந்த 5 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 31 வீடுகள் கடும் மழையினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கிய 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , மண்சரிவு அனர்த்தம் காரணமாக சில வீதிகளின் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.

பதுளை- பண்டாரவளை வீதியின் உடுவர 7 ஆம் கட்டைப் பகுதி, அப்புத்தளை- பெரகல வீதி, பதுளை- பசறை வீதியின் 3ஆம், 7ஆம் கட்டைப் பகுதிகள் , பதுளை- ஸ்பிரிங்வெலி வீதியின் கந்தனப் பகுதி, எல்ல- பசறை வீதி மற்றும் மடுல்சீமை – பசறை வீதியின் மெட்டிகாதென்னப் பகுதி என்பவற்றிலேயே இவ்வாறு மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் . அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அனைத்து தரப்பினருடனும் இணைந்து விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மழை தொடரும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால் மாவட்டத்தில் அனர்த்தங்கள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles