பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதோடு பெரும்பாலான பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதிக பனிமூட்டம் காரணமாக குளிர்கால நிலை நிலவுகின்றமையால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பணிப்புரை விடுத்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சநிலைமைக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பசறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கனவரல்ல மவுஸாகல தோட்டத்தில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை காரணமாக சுமார் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிக முகாமிடப்பட்டுள்ளனர். புஹுல்வத்த கிராம சேவையாளர் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் மற்றும் கனவரல்ல மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் அடங்கிய பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர்உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி பசறை பிரதேச செயலகம்
இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles