சர்வதேச நெறிமுறை மற்றும் சமவாயங்களுக்கு அமைய புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” எதிரணியில் இருந்தபோது அரச ஒடுக்குமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தரப்பினர் நாம். எமது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. எனவே, நாட்டிலுள்ள சட்டங்களை நாம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தமாட்டோம். எவரினதும் உரிமைகளை ஒடுக்குவதற்கு அவற்றை பயன்படுத்தபோவதும் இல்லை.
நாட்டில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்கின்றோம். இது தொடர்பான எமது கொள்கை மாறவில்லை.
எனினும், பூகோள பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட சட்டங்கள் உள்ளன. அந்தவகையில் சர்வதேச சமவாயங்களுக்கு அமைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை கொண்டுவர வேண்டும். அதற்குரிய சட்ட ஏற்பாடுகள் இடம்பெறும்வரை இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்டங்களை பயன்படுத்த நேரிடும்.” – என்றார்.
