பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் எனவும், அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதி அமைச்சர் ஆகிய இருவரும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல , ஏனைய கட்சிகளை காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாங்கள் தான் பாரதூரமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே இதன் பாரதூரம் எமக்கு நன்கு தெரியும்.
பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும்.” – என்று அவர் கூறியுள்ளார்.
