ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் பாடசாலை மாணவர்கள் குடிநீர் வசதியின்மையால் நாளாந்தம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த இப்பாடசாலையில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்றனர், 30 ஆசிரியர்களும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாடசாலையில் முறையாக குடிநீர் வழங்கப்படாமையால் மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையில் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னும் பின்னும் சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து சேமித்து வைத்தே பயன்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அயலிலுள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக பொகவந்தலாவை பகுதியில் காணப்படுகின்ற நிலையில் கை கழுவுவது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என சுகாதார பிரிவினர் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இங்கு குடிநீர் வசதியின்மையால் எவ்வாறு மாணவர்கள் இத்தொற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த பாடசாலைகளில் ஆண் பெண் ஆகிய இருபாலரும் கல்வி பயில்கின்ற நிலையில் நீர் இன்றி மலசல கூடங்களை பயன்படுத்துவதன் காரணமாக பல மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுற்றுப்புற சுழலில் துர்நாற்றும் வீசுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதே வேளை பாடசாலை நிறைவு பெற்றதன் பின் பிரதேசத்தில் உள்ள ஒரு சிலர் சுற்றுப்புற சூழலில் மது அருந்துவதற்கு பயன்படுத்துவதனால் பாடசாலை சூழல் பாதுகாப்பற்ற சூழலாக மாறிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.பாடசாலையில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த வாரத்தில் கூட பாடசாலையில் மாணவர்கள் விளையாடுவதற்காக முதலாம் தர வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களால் செலவு செய்து கட்டப்பட்ட விளையாட்டு வீடும் இனந்தெரியாதவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது
இது குறித்தும் பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பாடசாலையின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்குமாறும் பாடசாலையின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
