படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால் எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – என்று பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மொட்டு கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கிவருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பஸிலுக்கு தெரியும். எனவே, ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். அதனால் மொட்டு தரப்பினரும் மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே பொதுத்தேர்தல் கோரப்பட்டுள்ளது.
இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஏதேனும் ஒத்துழைப்பை பெறலாம் என பஸில் கருதுகின்றார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறமாட்டாது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி.” – என்றார்.










